நடக்கும் மீன் (Walking Fish)
நீ சொல் !
மீன்கள் யாவும்
நடக்க பழகிக்கொள்ளும்.
நீ சொல் !
விண்மீன் யாவும்
நிலவாய் மாறி நிற்கும்
நீ சொல் !
செல்கள் யாவும்
மின்னலாய் அரும்பி மின்னும்
~ அரன் 🤯
=====================
'மீன்கள் யாவும் நடக்க பழகிக்கொள்ளும்' ~ என்ற வரிக்கு பொருத்தமான புகைப்படத்தை தேடும் போது கண்ணில் சிக்கியது தான் இந்த ‘மெக்சிகன் நடக்கும் மீன்’ (Mexican Walking Fish).
- பெயரில் 'மீன்' இருந்தாலும், இது பல்லி வகையைச் சார்ந்தது. இது 'மெக்சிகன் சாலமந்தர்' என்றும் அழைக்கப்படுகின்றது. இதன் இயற்பெயர் ஆக்ஸலோட்டல் (Axolotl). இதன் தாயகம் மெக்சிகோ.
நடக்கும் மீன் :
- ஒரு காலத்தில் பல்கி பெருகி இருந்தவை, இன்று மெக்சிகோவில் இருக்கும் கோச்சிமில்கோ (Xochimilco Lake) என்ற ஏரியில் மட்டுமே காணப்படுகிறது. 2006-ம் ஆண்டு அருகி வரும் உயிரினங்களின் (Endangered) பட்டியலில் இது சேர்க்கப்பட்டது.
- மெக்சிகோவில் வாழ்ந்த பழங்குடியினர் இதனை தெய்வமாக வழிபட்டதாய் புராணங்கள் கூறுகின்றன.
- முப்பது சென்டிமீட்டர் வரை வளரக்கூடியது. பதினைந்து வருடங்கள் வாழக்கூடியது.
பெயர் காரணம் :
Axolotl = A(tl) + xolotl
Nahuatl என்ற மெக்சிகன் மொழியின் படி,
Atl என்றால் நீர்.
Xolotl என்றால் நாய்.
உருமாற்றம் (Metamorphosis) :
- உயிரியலை பொறுத்தவரை, உருமாற்றம் என்பது முதிர்ச்சியற்ற நிலையில் இருந்து முதிர்ச்சி உடைய நிலைக்கு மாறுதல். பூச்சிகளும் நீர்நிலவாழ்வனவும் சிறந்த உதாரணம்.
தவளை vs நடக்கும் மீன் :
- தவளையும் நடக்கும் மீனும் நீர்,நிலம் என இரண்டிலும் வாழக்கூடியது.
- முட்டையாக பிறக்கும் தவளை முதிர்பருவத்தை அடைவதற்கு இடையே லார்வா, தலைப்பிரட்டை என பல்வேறு விதமாக உருமாற்றம் பெறுகிறது.
- நடக்கும் மீனோ, அப்படி எந்த வகையான உருமாற்றமும் அடைவதில்லை. லார்வா-வாகவே கடைசிவரை வாழ்கிறது. உருமாற்றம் அடையாமலேயே பாலியல் முதிர்ச்சியையும் அடைகின்றது. அதன் பற்கள் ஒருபோதும் வளர்ச்சி பெறுவதில்லை. உணவை உட்கொள்ள அது உறிஞ்சும் முறையைச் சார்ந்திருக்கிறது. உணவை உட்கொள்வதில் இதுவொரு சின்ன உயிர் வாழும் வேக்யூம் கிளீனர்.
- தவளை தன் இளம்பருவத்தில் செவுள்களின் மூலம் சுவாசிக்கிறது. முதிர்பருவத்தில் செவுள்களை இழந்து, நிலத்தில் நுரையீரல் மூலம் சுவாசிக்கிறது.
- நடக்கும் மீன், முதிர்பருவத்தில் செவுள்களை இழப்பதில்லை. நுரையீரலைக் கொண்ட போதிலும் செவுள்களைக் கொண்டே நீரில் சுவாசிக்கிறது. காற்றில் ஆக்சிஜன் குறைவாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே நுரையீரலை பயன்படுத்துகிறது.
மீட்டாக்கும் திறன் (Regenerating ability) :
முதுகெலும்பு கொண்ட உயிரினங்களில்,
- தவளை, இழந்த தன் கைகால்களை மீட்டாக்கம் செய்யும் திறனை தலைப்பிரட்டையாக இருக்கும்போது கொண்டிருக்கும். அத்திறனை, தன் முதிர்பருவத்தில் இழக்கிறது.
- நடக்கும் மீன்கள், முதுகெலும்பு, இருதயம், தாடை எலும்பு, வால், தோல், கைகால் என அனைத்தையும் மீண்டும் உருவாக்கம் செய்யும் திறனை பெற்றுள்ளது. அதன் கைகால்களை ஆயிரம் முறை வெட்டி எறிந்தாலும், எந்தவித வடுக்களும் இல்லாமல் மீண்டும் மீண்டும் புதிதாய் உருவாக்கிக் கொள்ளும்.
மீட்டாக்கம் வேலை செய்யும் விதம் :
- நடக்கும் மீனின் கால் வெட்டப்பட்ட பகுதியில் இருக்கும் செல்கள் தங்களது தனித்துவத்தை இழக்கின்றன. அவை தோல் செல்களாகவோ, இரத்த செல்களாகவோ இருப்பதற்கு பதிலாக ஸ்டெம் செல்கள் போன்று வேலை செய்கின்றன. அவை 'பல்திறன் செல்கள்' (Pluripotent cells) என்று அழைக்கப்படுகின்றன. அவை வெட்டப்பட்ட பகுதியை சரிசெய்வதற்கு தேவையான அனைத்து செல்களையும் திசுக்களையும் உருவாக்குகின்றன.
அறிவியல் ஆராய்ச்சிகள் :
- ஜெல்லி மீன் ஒளிரவதற்கு காரணமான புரதத்தை (Green Fluorescent Protein), நடக்கும் மீனுக்குள் உட்செலுத்தி பச்சை வண்ணத்தில் ஒளிரும் நடக்கும் மீனை உருவாக்கியுள்ளனர்.
- அப்புரதத்துடன் புற்றுநோயை உருவாக்கும் செல்களை செலுத்தி அவை எவ்வாறு செயல்புரிகின்றன என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- மீட்டாக்கம் செய்யும் திறன் மூலம் மனிதர்களுக்கு பயன்பெறுதல் தொடர்பாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சர்க்கரை நோய் மற்றும் பிற காரணங்களுக்காக கைகால்களை இழந்தோரும், தீக்காயம் அடைந்தோரும், புற்றுநோயாளிகளும் இத்திறன் மூலம் பயன்பெறும் வகையிலான ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment